போலீஸ் கந்தசாமி பார்த்தது செக்யூரிட்டி வேலைதான். ஆனா அவரு கம்பீரம், கட்டிங், நடை, உடை எல்லாத்தையும் பார்த்து மக்கள் அவருக்குக் குடுத்ததுதான் ”போலீஸ்” அடைமொழி.  அவரு சிரிச்சே நான் பார்த்ததில்லை. ஆனா அந்தக்கா எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. எங்க கோட்டர்ஸ்ல அதிகம் பொட்டப் புள்ளைங்களாப் பிறந்துக்கிட்டு  இருந்தப்ப ரெண்டும் பசங்களாப் பெத்த பெருமை வேற முகத்துல தாண்டவமாடும் அக்காவுக்கு.

பெரியவன் கணேஷ் படிப்பில படு கெட்டி. சின்னவன் சரவணன் நேர்மாறு; படு சுட்டி. 1ல இருந்து 10 வரைக்கும் கிளாஸ் பர்ஸ்ட்தான் கணேசு. சரவணன் 9வரை வந்ததே பெரிய விஷயம். ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சா இருக்க இடமே தெரியாம அமைதியா இருப்பான் கணேசு.  சரண் வீட்டுல இருந்தா வீடே ரெண்டுபடும்.

+2வில நல்ல மார்க் வாங்கி பிஎஸ்ஜி டெக்ல பி இ படிச்சான் கணேசு. முடிச்சுட்டு அங்கேயே எம்பிஏவும் பண்ணினான். கேம்பஸ்லயே அலயன்ஸ் கம்யூனிக்கேசன்ஸ்ல நல்ல வேலை கிடைச்சிடுச்சு.

சரணுக்கு வாழ்க்கை அவ்வளவு ஈசியா அமையல.  அவங்க  அப்பா வழிக் காமாட்சிப் பாட்டி வேற, “புள்ளையப் பெத்துக் குடுன்னா சண்டாளனப் பெத்துக் குடுத்திருக்கா. இந்தக் கடங்காரன் எங்கியாவது வம்பிழுத்து என் புள்ளைய போலீஸ்ஸ்டேசனுக்கு இழுத்துடுவான் போல இருக்கே”ன்னு புலம்பிட்டே இருப்பாங்க.  சரணைச் சுத்தமாப் பிடிக்காது.

அவங்க அம்மா அவனக் கூட்டிட்டு வந்து எங்க அப்பாகிட்ட,”இவனுக்கு  எப்படியாவது நல்ல வழி காட்டுங்க அண்ணா, உங்களுக்குப் புன்னியமாப் போகட்டும்”னாங்க. எங்க அப்பாவுக்கு அவன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருந்திச்சு.

“சரி நான் பாத்துக்கிறேன்”னாரு. அவனைக் கூட்டிட்டுப் போயி மெக்கானின் முருகேசன்கிட்ட,”முருகு பையன் நம்ம போலிஸ் கந்தசாமி மகன். படு சூட்டிப்பானவன். படிக்க இஷ்டமில்லை. உன் கைவசம் வச்சுப் பாரு தேறுவானான்னு” “சரிங்ணா, இருக்கட்டும்”னாரு முருகேசன். அவருதான் மில்லுக்குத் தேவையான பார்ட்ஸை லேத்ல கடைஞ்சு குடுப்பாரு. எலக்ட்ரிக்கல் வேலை எல்லாம் செய்வாரு. பம்ப் செட் நல்லாப் பிரிச்சு காயில் கட்டுவாரு.

ஒரு வருசத்துல நல்லாத் தொழில் கத்துகிட்டான் சரண். எங்கப்பாகிட்ட வந்து,”அண்ணா பையன் ஓரளவு தேறிட்டான், மில்லுல சேத்து விடுங்க”ன்னாரு மெக்கனிக்.  அப்பா அவனைக் கூட்டிட்டுப் போயி, “செல்லத்துரை, இவன் நம்ம போலிஸ் கந்தசாமி பையன். படிப்பு வரலை ஆனா நம்ம முருகேசங்கிட்ட ஒரு வருசமா  மெக்கானிக் வேலை கத்துக்கிட்டிருக்கான். மெயிண்டெனன்ஸ்ல ஏதும் அசிஸ்டண்ட் வேலை இருந்தா போட்டுக் குடு, வளர வேண்டிய பையன்”னாரு. செல்லத்துரை அண்ணந்தான் அந்த மில்லுக்கு மெயிண்டெனன்ஸ் ஃபொர்மேன்.

நல்ல மாற்றம் சரண்கிட்ட.  6 மாசத்திலேயே ஸ்பின்னிங் ஃப்ரேம்ல நல்லா நேக்குத் தெரிஞ்சுக்கிட்டான். செல்லத் துரை அண்ணன் இல்லைன்னா இவனை எழுப்பி கூட்டிட்டுப் போவாங்க ப்ரேக்டவுன் அட்டெண்ட் பண்ண.   செல்லத் துரை அண்ணனுக்கும் அவன நல்லாப் பிடிச்சிப் போச்சு. ஜின்னிங்,  ப்ளோ ரூம், சிம்ப்ளெக்ஸ், கார்டிங்னு எல்லா டிபார்ட்மெண்ட்லயும் பழக்கினாரு.

2 வருசம் கழிச்சு, வீவிங் யூனிட் போடலாம்னு மில்லுல முடிவு செஞ்சாங்க. 15 ஃப்ரேம் சுல்சர் லூம்ஸ் இம்போர்ட் பண்ணுனாங்க. இன்ஸ்டால் பண்ண மும்பைல இருந்து எஞ்சினியர் வந்தாரு. ஒரு ஃப்ரேம் இன்ஸ்டால் பண்ணும்போதே சரணோட திறமையத் தெரிஞ்சுகிட்டாரு.மீதி ஃப்ரேமை எல்லாம் அவனை விட்டே இன்ஸ்டால் பண்ணிட்டாரு. ட்ரையல் எடுக்கிற அன்னைக்கு எம்டி கிட்டவே சொல்லிட்டாரு, “பையன் நல்ல திறமைசாலி”ன்னு.

6 மாசம் ஆகி இருக்கும் அந்த எஞ்சினீயர், செல்லத்துரை அண்ணனுக்கு போன் பண்ணி ”சரணுக்கு எங்க கம்பெனில வேலை இருக்கு வரச் சொல்லுங்க நீங்க குடுக்குற மாதிரி 3 மடங்கு சம்பளம்”னாரு. சரணோட அம்மா ”பையன வெளியூர் எல்லாம் அனுப்ப மாட்டேன்”னாங்க. அப்பாவும், செல்லத்துரை அண்ணனும்தான் பேசிச் சம்மதிக்க வச்சாங்க.

மும்பைல ஆபீஸ்னாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இன்ஸ்டலேசனுக்குச் சரணத்தான் அனுப்பினாங்க. ஆள் தோரணையே மாறிடுச்சு இப்ப.

கணேசு, கூட வேலை பார்த்த ஒரு வட இந்தியப்பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா வந்து ஆசீர்வாதம் வாங்கினான். இப்ப அவன் அலயன்ஸ் மொபைல் கம்பெனில சி இ ஓ ஆகிட்டான்.  சரண் படிக்கலிங்கிறத கணேசும் அவம் பொண்டாட்டியும் கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. சரண் அதக் கண்டுக்கிடவே மாட்டான். ஊருக்கு வந்தாலும் மில்லுக்குப் போயிடுவான். எம்டிகிட்ட நல்ல பேரு அவனுக்கு. வந்தா அவரு வீட்டுலதான் மதியச் சாப்பாடு. சாப்பிட்டுட்டு வீவிங் யூனிட்டுக்குப் போயிடுவான். என்ன என்ன இம்ப்ரூவ்மெண்ட் செய்யலாம்னு சொல்லிட்டு வருவான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செஞ்சதுல கணேச அரெஸ்ட் பண்ணி திகார் ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க.  கணேச வெளில கொண்டு வர  அலைஞ்சிட்டு இருக்கான் சரண். நல்லவேளை காமாட்சிப் பாட்டி செத்துப் போயிட்டாங்க.