வெறுப்பைத் தின்று
விரோதம் வளர்க்கும்
வக்கிர மிருகமொன்றை
நேரில் கண்டேன்.
சங்கிலிப் புகையன்
கையிடுக்கிலாடும்
முடிவிலாச் சிகரெட்
கனன்று தரும் கரும்புகை
காற்றில் போடும் கோலமாய்
பரப்புகிறது வன்மம்
பகட்டாடைப் பளபளப்பில்
தன்னழுக்கு மறைத்து
அடுத்தவன் அம்மணத்தில்
ஆனந்தம் காண்கிறதன் மனசு
செத்துப்போகாதா சீக்கிரம்
என்றேங்குவதைத் தவிர
வேறேதும் ஏலாமல்
கசப்பாய்க் கழிகிறது நாட்கள்

பிரம்பு வாத்தியார் கந்தசாமி,
பாட்டு டீச்சர் சரஸ்வதி,
இடிந்து விழுந்த ஏழாப்புக் கட்டிடம்
தோத்து அழுத கபடிப் போட்டி
மயங்கி விழுந்த சுதந்திர தின மார்ச்
மாற்றலாகிப் போன சாந்தி டீச்சர்
எட்டாப்பில் திருமணமாகிய புனிதா
என
பேச எவ்வளவோ இருந்தும்
அவனைப் பற்றியே
அரை மணிநேரம் பேசிச் சென்றான்
எதிர்பாராத தருணமொன்றில்
சந்திக்க நேர்ந்த
பள்ளித் தோழன்.
குறிப்பு : இஃதுவோர் மறுபதிவு
சிந்திச் சிதறும்
சிறு நெல்லியென
சிதறித் தெறிக்கிறது மனது
ஒன்றில் தொடங்கி
மற்றதில் தாவி
பிறிதொன்றில் சாடி
அங்கும் நில்லாது
அடுத்ததிலும் தங்காது
மின்விசிறிக் காற்றில்
அலைந்தலையும் புகையென.
மழைநீரோடிய
சிற்றோடை தேங்கும்
வரியோடிய வண்டலாய்க்
கழிகிறது நாட்கள்
நன்றி : நேசமித்ரன் – “வரியோடிய வண்டல்” பதம் தந்தமைக்கு
Pic Courtesy :www.abstractart.org

விதைகள் புதைந்திருக்கும்
நிலமெப்போதும்
வெம்புவதில்லை
திசையெங்கும்
வேர்கள் கிளைத்துக்
கிழிக்கும்போதும்
வருந்துவதில்லை
விருட்சம்
வசந்தத்தின் வனப்பில்
தன் நிலை மறக்கையில்
புலம்புவதில்லை நிலம்
புயலோ, மழையோ,
இடியோ, வெயிலோ
எம்மாற்றமும் இன்றி
எப்போதும்போல்
விருட்சத்தைத்
தாங்கியபடியே
பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை.