இன்றுமுதல் புத்தகச்சந்தைத் திருவிழா.

குழுமமொன்றில் என் பரிந்துரையாக நான் சொல்லிய புத்தகங்கள் இவை

புது வாசகர்களுக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “முத்துக்கள் பத்து” சிறுகதைத் தொகுப்பைப் பரிந்துரைக்கிறேன். விலை 40.00

1. வண்ணதாசன்
2. நாஞ்சில் நாடன்
3. அசோகமித்ரன்
4. ச தமிழ்ச்செல்வன்
5. தி.ஜானகிராமன்
6. கு.அழகிரிசாமி
7. ஆ.மாதவன்
8. வண்ணநிலவன்

கண்மணி குணசேகரன்
1. வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுதி
2. கோரை அல்லது அஞ்சலை  நாவல்

சு. தமிழ்ச்செல்வி
1. அளம் – நாவல்

கந்தர்வன்
1. சீவன் – சிறுகதைத் தொகுதி

நாஞ்சில் நாடன்
1. சூடிய பூ சூடற்க – சிறுகதைத் தொகுதி
2. நஞ்சென்றும் அமுதென்றும் – கட்டுரைத் தொகுதி

பெருமாள் முருகன்
1. கங்கணம்

ஆதவன்
1. காகித மலர்கள்

கி.ரா
1. கோபல்ல கிராமம்

ஜோ டி க்ரூஸ்
1. ஆழி சூழ் உலகு

ஜெயமோகன்.
1, ஊமைச் செந்நாய்

எஸ்ரா
1. கோடுகள் இல்லாத வரைபடம்.
பொதுவாக எதைப்படிக்கும் முன்பும் ஒரு முன்முடிவு இல்லாமல் படித்தால் சுவையாக இருக்கும். நான் அபப்டித்தான் படிப்பேன். முன்னுரை மதிப்புரை எதையும் படிக்க மாட்டேன். இறுதியாகப் படித்தல் நாம் உணர்ந்ததும் முன்னுரை எழுதியவர் உணர்ந்ததும் வேறாக இருக்கும். இல்லையெனில் முன்னுரையில் சொல்லியது முன்னால் வந்து படிக்கும் ஆர்வத்தைக் குறைக்கும்.

நான் சொல்லி இருக்கும் பட்டியல் எல்லா வகைப் புத்தகங்களையும். அதிலிருந்து இந்த வகை பிடிக்கிறது என அதில் மேலும் தேடிப் படிக்கலாம்.

சிந்திச் சிதறும்

சிறு நெல்லியென

சிதறித் தெறிக்கிறது மனது

ஒன்றில் தொடங்கி

மற்றதில் தாவி

பிறிதொன்றில் சாடி

அங்கும் நில்லாது

அடுத்ததிலும் தங்காது

மின்விசிறிக் காற்றில்

அலைந்தலையும் புகையென.

மழைநீரோடிய

சிற்றோடை தேங்கும்

வரியோடிய வண்டலாய்க்

கழிகிறது நாட்கள்

நன்றி : நேசமித்ரன் – “வரியோடிய வண்டல்”  பதம் தந்தமைக்கு

Pic Courtesy :www.abstractart.org

விதைகள் புதைந்திருக்கும்
நிலமெப்போதும்
வெம்புவதில்லை

திசையெங்கும்
வேர்கள் கிளைத்துக்
கிழிக்கும்போதும்
வருந்துவதில்லை

விருட்சம்
வசந்தத்தின் வனப்பில்
தன் நிலை மறக்கையில்
புலம்புவதில்லை நிலம்

புயலோ, மழையோ,
இடியோ, வெயிலோ
எம்மாற்றமும் இன்றி
எப்போதும்போல்
விருட்சத்தைத்
தாங்கியபடியே

பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை.

கீழக் கோட்டர்ஸ் வேப்பமரம், அதனடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் அப்பாயி,  குருவிக்கூடு ஹேர்ஸ்டைல் ஆறுமுகம் அண்ணன், அவர் வளர்த்த ”டைகர்”, சிதம்பரம் மாமா, கருவாயன் இளங்கோ, ஜெயபால், ரெஜினா, அப்துல் அஜீஸ், எம்பாலன்,  கொட்டமடித்த கிணறு,  தலைப்பிரட்டை பிடித்து வந்து குழம்பு வைக்கச் சொல்லி அம்மாவிடம் செய்த வம்பு, சண்முக நதிக்குக் குளிக்கச் சென்று தீ வைத்த வைக்கோல் படப்பு, பம்பரக் கயிற்றுக்கு ஹார்லிக்ஸ் டப்பா முடியைக் கட்டி வந்த பாலமுருகன்,  ஓட்டிப் பழகிய மட்கார்டு, பெல் ஏதுமற்ற சைக்கிள், எப்போதும் கேட்டுக் கொண்டிருந்த இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன ஆசிய சேவை, கோபால் பற்பொடி என இன்னும் இன்னும் பலவற்றை ஞாபகப் படுத்தும் ஒற்றை நபராக வந்திருந்தார் பா.ராஜாராம் – கரு வேல நிழல் தருபவர்.

ஒரு வார்த்தை, சம்பவம், உடை, வாசனை, மாறுபட்ட நடை, உணவுப்பழக்கம் என ஏதோவொன்றுடன் மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அந்த ஒன்றை மீண்டும் பார்க்கவோ அனுபவிக்கவோ நேர்கையில் அந்த மனிதர்களின் ஞாபகம் மீளும். ஆனால் ஒட்டு மொத்த பால்யத்தின் நினைவுகளை இப்படிச் சட்டென ஒரே வார்த்தையில் உயிர்த்தெழ வைப்பது ராஜாராமால் மட்டும்தான் முடியும் – மக்கா.

ராஜாராம்,ஜ்யோவ்ராம்,குமார் என சில நண்பர்கள் பேனா நண்பர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்; நட்பையும் தொடர்ந்திருக்கிறார்கள். குழந்தை கிழித்துப் போட்ட காகிதமாக வாழ்க்கை அவர்களை திசைக் கொன்றாக எறிந்து விட்டது.  பொருள் தேடும் நிமித்தம் தொடர்புகளைப் பேண இயாலாமற் போயிற்று.

தம்பியின் ஆலோசனைப் படி வலைப்பூ ஒன்றைத் தொடங்கி தனது கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார் ராஜாராம். கவிதை வாசிப்பில் தீராத தாகம் கொண்ட ஜ்யோவ் கண்களில் அது பட, அந்தக் கவிதை முன்பு எங்கேயோ படித்தாற்போல இருக்கிறதே என யோச்சித்துச் சரியாகப் பிடித்துவிட்டார் ராஜாராமை.

விகடனில் வெளியான இவரது கவிதையைப் படித்து இன்னொரு பேனா நண்பர் விகடன் அலுவலகத்தில் பேசி ராஜாராமிற்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்; அவர்தான் இவரோ என்ற அய்யத்துடன்.  அவரேதான் இவர் எனக் கண்டு கொண்ட பேனா நண்பரைப் பார்க்க கோவை வந்திருந்தார். 13 வருடங்களுக்குப் பிறகு துளிரும் நட்பு.

சிலரோடு சில விஷயங்களைப் பேசலம். இன்னும் சிலரோடு பலவற்றைப் பேசலாம். ஆனால் ராஜாராமோடு எதையும் பேசலாம்.  இத்தனை வருட வாழக்கையும் அதில் அவர் ஏறி இறங்கிய மேடு பள்ளங்களும் கடந்த தூரங்களும் காத்திருப்புகளும் எதிர்பார்த்தவைகளும் ஏமாற்றங்களும் என எல்லாம் அவரைப் பக்குவமாக்கி இருக்கின்றன.

வேப்பமர நிழல் போல அல்ல கருவேல நிழல். கூரிய முற்களால் செய்த படுக்கை விரிப்பு மரத்தினடியில். அதில் எப்படி ஆசுவாசம் செய்வது?

”கடுமையான வறட்சி எதையும் விளைவிக்க முடியாது. குளங்களில் எல்லாம் கருவேலமரமே வளர்ந்தது. எங்களுக்கு இளைப்பாற இடம் அதனடியில் என்பதைத் தவிர வேறு தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை. வேறு வழியின்றி அதையே பழக்கப் படுத்திக் கொண்டோம்.

ஆனால் கருவேலம்பூ வாசனைக்கு நிகரான ஒன்றை இதுவரை நான் நுகர்ந்ததில்லை”

உண்மைதான் ராஜாராம். உங்கள் மூலம் அதை நானும் நுகர்ந்தேன்.