போலீஸ் கந்தசாமி பார்த்தது செக்யூரிட்டி வேலைதான். ஆனா அவரு கம்பீரம், கட்டிங், நடை, உடை எல்லாத்தையும் பார்த்து மக்கள் அவருக்குக் குடுத்ததுதான் ”போலீஸ்” அடைமொழி.  அவரு சிரிச்சே நான் பார்த்ததில்லை. ஆனா அந்தக்கா எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. எங்க கோட்டர்ஸ்ல அதிகம் பொட்டப் புள்ளைங்களாப் பிறந்துக்கிட்டு  இருந்தப்ப ரெண்டும் பசங்களாப் பெத்த பெருமை வேற முகத்துல தாண்டவமாடும் அக்காவுக்கு.

பெரியவன் கணேஷ் படிப்பில படு கெட்டி. சின்னவன் சரவணன் நேர்மாறு; படு சுட்டி. 1ல இருந்து 10 வரைக்கும் கிளாஸ் பர்ஸ்ட்தான் கணேசு. சரவணன் 9வரை வந்ததே பெரிய விஷயம். ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சா இருக்க இடமே தெரியாம அமைதியா இருப்பான் கணேசு.  சரண் வீட்டுல இருந்தா வீடே ரெண்டுபடும்.

+2வில நல்ல மார்க் வாங்கி பிஎஸ்ஜி டெக்ல பி இ படிச்சான் கணேசு. முடிச்சுட்டு அங்கேயே எம்பிஏவும் பண்ணினான். கேம்பஸ்லயே அலயன்ஸ் கம்யூனிக்கேசன்ஸ்ல நல்ல வேலை கிடைச்சிடுச்சு.

சரணுக்கு வாழ்க்கை அவ்வளவு ஈசியா அமையல.  அவங்க  அப்பா வழிக் காமாட்சிப் பாட்டி வேற, “புள்ளையப் பெத்துக் குடுன்னா சண்டாளனப் பெத்துக் குடுத்திருக்கா. இந்தக் கடங்காரன் எங்கியாவது வம்பிழுத்து என் புள்ளைய போலீஸ்ஸ்டேசனுக்கு இழுத்துடுவான் போல இருக்கே”ன்னு புலம்பிட்டே இருப்பாங்க.  சரணைச் சுத்தமாப் பிடிக்காது.

அவங்க அம்மா அவனக் கூட்டிட்டு வந்து எங்க அப்பாகிட்ட,”இவனுக்கு  எப்படியாவது நல்ல வழி காட்டுங்க அண்ணா, உங்களுக்குப் புன்னியமாப் போகட்டும்”னாங்க. எங்க அப்பாவுக்கு அவன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருந்திச்சு.

“சரி நான் பாத்துக்கிறேன்”னாரு. அவனைக் கூட்டிட்டுப் போயி மெக்கானின் முருகேசன்கிட்ட,”முருகு பையன் நம்ம போலிஸ் கந்தசாமி மகன். படு சூட்டிப்பானவன். படிக்க இஷ்டமில்லை. உன் கைவசம் வச்சுப் பாரு தேறுவானான்னு” “சரிங்ணா, இருக்கட்டும்”னாரு முருகேசன். அவருதான் மில்லுக்குத் தேவையான பார்ட்ஸை லேத்ல கடைஞ்சு குடுப்பாரு. எலக்ட்ரிக்கல் வேலை எல்லாம் செய்வாரு. பம்ப் செட் நல்லாப் பிரிச்சு காயில் கட்டுவாரு.

ஒரு வருசத்துல நல்லாத் தொழில் கத்துகிட்டான் சரண். எங்கப்பாகிட்ட வந்து,”அண்ணா பையன் ஓரளவு தேறிட்டான், மில்லுல சேத்து விடுங்க”ன்னாரு மெக்கனிக்.  அப்பா அவனைக் கூட்டிட்டுப் போயி, “செல்லத்துரை, இவன் நம்ம போலிஸ் கந்தசாமி பையன். படிப்பு வரலை ஆனா நம்ம முருகேசங்கிட்ட ஒரு வருசமா  மெக்கானிக் வேலை கத்துக்கிட்டிருக்கான். மெயிண்டெனன்ஸ்ல ஏதும் அசிஸ்டண்ட் வேலை இருந்தா போட்டுக் குடு, வளர வேண்டிய பையன்”னாரு. செல்லத்துரை அண்ணந்தான் அந்த மில்லுக்கு மெயிண்டெனன்ஸ் ஃபொர்மேன்.

நல்ல மாற்றம் சரண்கிட்ட.  6 மாசத்திலேயே ஸ்பின்னிங் ஃப்ரேம்ல நல்லா நேக்குத் தெரிஞ்சுக்கிட்டான். செல்லத் துரை அண்ணன் இல்லைன்னா இவனை எழுப்பி கூட்டிட்டுப் போவாங்க ப்ரேக்டவுன் அட்டெண்ட் பண்ண.   செல்லத் துரை அண்ணனுக்கும் அவன நல்லாப் பிடிச்சிப் போச்சு. ஜின்னிங்,  ப்ளோ ரூம், சிம்ப்ளெக்ஸ், கார்டிங்னு எல்லா டிபார்ட்மெண்ட்லயும் பழக்கினாரு.

2 வருசம் கழிச்சு, வீவிங் யூனிட் போடலாம்னு மில்லுல முடிவு செஞ்சாங்க. 15 ஃப்ரேம் சுல்சர் லூம்ஸ் இம்போர்ட் பண்ணுனாங்க. இன்ஸ்டால் பண்ண மும்பைல இருந்து எஞ்சினியர் வந்தாரு. ஒரு ஃப்ரேம் இன்ஸ்டால் பண்ணும்போதே சரணோட திறமையத் தெரிஞ்சுகிட்டாரு.மீதி ஃப்ரேமை எல்லாம் அவனை விட்டே இன்ஸ்டால் பண்ணிட்டாரு. ட்ரையல் எடுக்கிற அன்னைக்கு எம்டி கிட்டவே சொல்லிட்டாரு, “பையன் நல்ல திறமைசாலி”ன்னு.

6 மாசம் ஆகி இருக்கும் அந்த எஞ்சினீயர், செல்லத்துரை அண்ணனுக்கு போன் பண்ணி ”சரணுக்கு எங்க கம்பெனில வேலை இருக்கு வரச் சொல்லுங்க நீங்க குடுக்குற மாதிரி 3 மடங்கு சம்பளம்”னாரு. சரணோட அம்மா ”பையன வெளியூர் எல்லாம் அனுப்ப மாட்டேன்”னாங்க. அப்பாவும், செல்லத்துரை அண்ணனும்தான் பேசிச் சம்மதிக்க வச்சாங்க.

மும்பைல ஆபீஸ்னாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இன்ஸ்டலேசனுக்குச் சரணத்தான் அனுப்பினாங்க. ஆள் தோரணையே மாறிடுச்சு இப்ப.

கணேசு, கூட வேலை பார்த்த ஒரு வட இந்தியப்பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா வந்து ஆசீர்வாதம் வாங்கினான். இப்ப அவன் அலயன்ஸ் மொபைல் கம்பெனில சி இ ஓ ஆகிட்டான்.  சரண் படிக்கலிங்கிறத கணேசும் அவம் பொண்டாட்டியும் கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. சரண் அதக் கண்டுக்கிடவே மாட்டான். ஊருக்கு வந்தாலும் மில்லுக்குப் போயிடுவான். எம்டிகிட்ட நல்ல பேரு அவனுக்கு. வந்தா அவரு வீட்டுலதான் மதியச் சாப்பாடு. சாப்பிட்டுட்டு வீவிங் யூனிட்டுக்குப் போயிடுவான். என்ன என்ன இம்ப்ரூவ்மெண்ட் செய்யலாம்னு சொல்லிட்டு வருவான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செஞ்சதுல கணேச அரெஸ்ட் பண்ணி திகார் ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க.  கணேச வெளில கொண்டு வர  அலைஞ்சிட்டு இருக்கான் சரண். நல்லவேளை காமாட்சிப் பாட்டி செத்துப் போயிட்டாங்க.

டூ வீலர் ஓட்டும் பெண்மணிகளைப் பார்த்து மனதில்தோன்றியவை இந்தக் கேள்விகள்.  சும்மா ஜாலிக்காகத்தான்.  அந்த வாதி இந்த வாதின்னு அடிக்க வராதீக.

  1. தேடித் தேடி ஹைஹீல்ஸ்வாங்குறீங்க. வண்டியோட ரெண்டு பக்கமும் காலை நீட்டி அதைத் தரையில தேச்சு நோஹீல்ஸ் ஆக்குறீங்களே? அது ஏங்க அப்படி?
  2. ரெண்டு பக்கமும் கண்ணாடி இருக்கு. பின்னாடி என்ன நடக்குதுன்னு முன்னாடிச் சொல்லத்தான் அது. இருந்தாலும் திரும்பும்போது பின்னாடித் திரும்பிப் பார்த்தே திரும்புறீங்களே? அது ஏங்க அப்படி?
  3. திரும்புமுன் சிக்னல் செய்யனும்னு குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனா நீங்க திரும்பீட்டேஏஏஏ சிக்னல் போடுறீங்களே? அது ஏங்க அப்படி?
  4. டவுன்பஸ் பின்னாடியே நூல் பிடிச்சுப் போறீங்க. அது நின்னா நிக்கிறீங்க போனாப் போறீங்க [டவுன் டு வீலர் சர்வீஸ் மாதிரி]. அது ஏங்க அப்படி?
  5. ரோட்டுல யாருமே இல்லைன்னாலும் 100 அடிக்கு ஒரு தடவை ஆரன் அடிக்கிறீங்க. அது ஏங்க அப்படி?
  6. ரெண்டு குழந்தைங்க, அவங்க பேக், லன்ச் பேக், உங்க பேக் எல்லாம் மாட்டிக்கிட்டு, ராதாகிருஷ்ணன் கடையில அரைக்கிலோ தக்காளி, ஒரு கிலோ வெங்காயம், ரெண்டு பால்பாகட் வாங்கிட்டு வர்ர்றீங்க? அது என்ன ஸ்கூட்டியா டாடா ஏஸா? அது ஏங்க அப்படி?
  7. லைட் எரியுதுன்னு பக்கத்துல வந்து சொன்னா ”தேங்க்ஸ்”னு சொல்லாம “பரவாயில்லை”ன்னு சொல்றீங்க? அது ஏங்க அப்படி?
  8. டு வீலர் பஞ்சராகுறது சகஜம். ஆனா உங்க வண்டி பஞ்சராயிட்டா காலேல முழிச்ச மூஞ்சி சரியில்லைன்னு அலுத்துக்கிறீங்க. அது ஏங்க அப்படி?
  9. இன்ஸ்சூரன்ஸ் இருக்கான்னு கேட்டா, “10 லட்ச ரூபாய்க்கு இருக்கு”ன்னு சொல்றீங்க. அது ஏங்க அப்படி?
  10. வண்டி நம்பர் கேட்ட 4565, 4656, 5646னு எல்லாக் காம்பினேசனும் சொல்றீங்க. 4556னு உன்மையான் நம்பரச் சொல்லவே மாட்டேங்கிறீங்க . அது ஏங்க அப்படி?

இன்னும் இருக்குங்க. ஆனா பயமா இருக்கு.

 

படம் : நெட்டிலிருந்து சுட்டது.

வெறுப்பைத் தின்று

விரோதம் வளர்க்கும்

வக்கிர மிருகமொன்றை

நேரில் கண்டேன்.

சங்கிலிப் புகையன்

கையிடுக்கிலாடும்

முடிவிலாச் சிகரெட்

கனன்று தரும் கரும்புகை

காற்றில் போடும் கோலமாய்

பரப்புகிறது வன்மம்

பகட்டாடைப் பளபளப்பில்

தன்னழுக்கு மறைத்து

அடுத்தவன் அம்மணத்தில்

ஆனந்தம் காண்கிறதன் மனசு

செத்துப்போகாதா சீக்கிரம்

என்றேங்குவதைத் தவிர

வேறேதும் ஏலாமல்

கசப்பாய்க் கழிகிறது நாட்கள்

நல்ல இலக்கியப்படைப்பு ஒரு கால கட்டத்தை அல்லது ஒரு சாரரின் வாழ்க்கையைப் படம் பிடித்துப் பிரதிபலிக்க வேண்டும்.

மனல் கடிகை – எம் கோபால கிருஷ்ணன்
கோரை – கண்மணி குனசேகரன்
அளம், கீதாரி – சு தமிழ்ச் செல்வி
சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன்
ஏறு வெயில் – பெருமாள் முருகன்
போக்கிடம் – விட்டல்ராவ்
ஆழி சூழ் உலகு – ஜோ டி குருஸ்
ரத்த உறவு – யூமா வாசுகி
ஆகிய நாவல்கள் அவ்வகையே எனினும் ஜோ டி குருஸின் இரண்டாவது நாவலான கொற்கை இப்பட்டியலில் முதலிடத்தில் வைக்கத் தக்கது.

எதைப்பற்றிய நாவல் இது?

”கால காலமா இங்க முத்தெடுத்த கத, பாண்டியபதி கொற்கய ஆண்ட கத, நாங்க இங்க பிழைக்க வந்த கத, பாய்மரக் கப்பலோடுன கத, கப்ப வந்த கத, வெள்ளக்காரம் வந்த கத, போன கத, இன்னும் என்னென்னமோ கதய…” பக் – 1113

1914 ஆம் ஆண்டில் துவங்கும் இந்நாவல் 1100 பக்கங்களைத் தாண்டி 2000ஆவது ஆண்டில் நிறைவடைகிறது தற்காலிகமாக. சொல்லப்பட்டவைகளினூடாக சொல்லப்பட வேண்டியவை ஏராளம் என்பதை நிறுவுகிறது இந்நாவல்.

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி மேற்செல்கையில் வீசி எறியப்படுபவர்களின் வாழ்க்கை, யானை வந்து மாலை போட்டு அதிர்ஷ்டம் அடித்த வாழ்க்கை, எது எப்படி என்றாலும் தனக்கென ஒரு கொள்கை வைத்து வாழ்பவர்களின் வாழ்க்கை, எந்தத் தொழிலும் நிரந்தரமல்ல என்பதைப் புரிந்து கொள்ள மறுத்தவர்களின் வாழ்க்கை, கிடைத்தைப் பற்றிக் கொண்டு மேலேறியவர்களின் வாழ்க்கை என இது வரையும் சித்திரம் எண்ணற்றது.

இந்த ஒற்றை நாவல் பல நாவல்களாக விரிகிறது. பாண்டியபதியின் வாழ்க்கை, பிலிப் தண்டல் வாழ்க்கை, சன்முகவேலின் வாழ்க்கை, பவுல் தண்டல் வாழ்க்கை, அல்வாரிஸ் வாழ்க்கை, ரிபேராக்கள் வாழ்க்கை, பல்டோனாக்கள் வாழ்க்கை, பர்னாந்துமார்கள் வாழ்க்கை, நாடார்கள் வாழ்க்கை, பரதவர்கள் வாழ்க்கை, கிருத்துவர்கள் வாழ்க்கை என ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்தனி நாவலாகவே தோன்றுகிறது.

நாவலின் ஊடாக ஒரு நூற்றாண்டுகாலமாக ஏற்பட்ட சமுதாய மாற்றத்தையும், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கால ஓட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பது நாவலின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. காமராசர் மறைவு, தி மு க ஆட்சி பிடித்தல் சந்திரபாபு திருமண நிகழ்வு என அந்தந்த வருடத்தில் ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாகச் சொல்லி இருப்பது சுவாரசியமாக இருக்கிறது.

காலச்சுவடு பதிப்பக வெளியீடு
விலை : ரூ 800

”நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன்.” ஜோ டி குருஸின் பேட்டி

உங்கள் திசை நோக்கி என வணக்கத்தைச் சொல்கிறேன் தோழர் குருஸ்.

குறிப்பு : இஃதுவோர் மறுபதிவு

பிரம்பு வாத்தியார் கந்தசாமி,

பாட்டு டீச்சர் சரஸ்வதி,
இடிந்து விழுந்த ஏழாப்புக் கட்டிடம்
தோத்து அழுத கபடிப் போட்டி
மயங்கி விழுந்த சுதந்திர தின மார்ச்
மாற்றலாகிப் போன சாந்தி டீச்சர்
எட்டாப்பில் திருமணமாகிய புனிதா
என
பேச எவ்வளவோ இருந்தும்
அவனைப் பற்றியே
அரை மணிநேரம் பேசிச் சென்றான்
எதிர்பாராத தருணமொன்றில்
சந்திக்க நேர்ந்த
பள்ளித் தோழன்.

குறிப்பு : இஃதுவோர் மறுபதிவு