நினைவுக் கிளர்த்தல்
கீழக் கோட்டர்ஸ் வேப்பமரம், அதனடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் அப்பாயி, குருவிக்கூடு ஹேர்ஸ்டைல் ஆறுமுகம் அண்ணன், அவர் வளர்த்த ”டைகர்”, சிதம்பரம் மாமா, கருவாயன் இளங்கோ, ஜெயபால், ரெஜினா, அப்துல் அஜீஸ், எம்பாலன், கொட்டமடித்த கிணறு, தலைப்பிரட்டை பிடித்து வந்து குழம்பு வைக்கச் சொல்லி அம்மாவிடம் செய்த வம்பு, சண்முக நதிக்குக் குளிக்கச் சென்று தீ வைத்த வைக்கோல் படப்பு, பம்பரக் கயிற்றுக்கு ஹார்லிக்ஸ் டப்பா முடியைக் கட்டி வந்த பாலமுருகன், ஓட்டிப் பழகிய மட்கார்டு, பெல் ஏதுமற்ற சைக்கிள், எப்போதும் கேட்டுக் கொண்டிருந்த இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன ஆசிய சேவை, கோபால் பற்பொடி என இன்னும் இன்னும் பலவற்றை ஞாபகப் படுத்தும் ஒற்றை நபராக வந்திருந்தார் பா.ராஜாராம் – கரு வேல நிழல் தருபவர்.
ஒரு வார்த்தை, சம்பவம், உடை, வாசனை, மாறுபட்ட நடை, உணவுப்பழக்கம் என ஏதோவொன்றுடன் மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அந்த ஒன்றை மீண்டும் பார்க்கவோ அனுபவிக்கவோ நேர்கையில் அந்த மனிதர்களின் ஞாபகம் மீளும். ஆனால் ஒட்டு மொத்த பால்யத்தின் நினைவுகளை இப்படிச் சட்டென ஒரே வார்த்தையில் உயிர்த்தெழ வைப்பது ராஜாராமால் மட்டும்தான் முடியும் – மக்கா.
ராஜாராம்,ஜ்யோவ்ராம்,குமார் என சில நண்பர்கள் பேனா நண்பர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்; நட்பையும் தொடர்ந்திருக்கிறார்கள். குழந்தை கிழித்துப் போட்ட காகிதமாக வாழ்க்கை அவர்களை திசைக் கொன்றாக எறிந்து விட்டது. பொருள் தேடும் நிமித்தம் தொடர்புகளைப் பேண இயாலாமற் போயிற்று.
தம்பியின் ஆலோசனைப் படி வலைப்பூ ஒன்றைத் தொடங்கி தனது கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார் ராஜாராம். கவிதை வாசிப்பில் தீராத தாகம் கொண்ட ஜ்யோவ் கண்களில் அது பட, அந்தக் கவிதை முன்பு எங்கேயோ படித்தாற்போல இருக்கிறதே என யோச்சித்துச் சரியாகப் பிடித்துவிட்டார் ராஜாராமை.
விகடனில் வெளியான இவரது கவிதையைப் படித்து இன்னொரு பேனா நண்பர் விகடன் அலுவலகத்தில் பேசி ராஜாராமிற்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்; அவர்தான் இவரோ என்ற அய்யத்துடன். அவரேதான் இவர் எனக் கண்டு கொண்ட பேனா நண்பரைப் பார்க்க கோவை வந்திருந்தார். 13 வருடங்களுக்குப் பிறகு துளிரும் நட்பு.
சிலரோடு சில விஷயங்களைப் பேசலம். இன்னும் சிலரோடு பலவற்றைப் பேசலாம். ஆனால் ராஜாராமோடு எதையும் பேசலாம். இத்தனை வருட வாழக்கையும் அதில் அவர் ஏறி இறங்கிய மேடு பள்ளங்களும் கடந்த தூரங்களும் காத்திருப்புகளும் எதிர்பார்த்தவைகளும் ஏமாற்றங்களும் என எல்லாம் அவரைப் பக்குவமாக்கி இருக்கின்றன.
வேப்பமர நிழல் போல அல்ல கருவேல நிழல். கூரிய முற்களால் செய்த படுக்கை விரிப்பு மரத்தினடியில். அதில் எப்படி ஆசுவாசம் செய்வது?
”கடுமையான வறட்சி எதையும் விளைவிக்க முடியாது. குளங்களில் எல்லாம் கருவேலமரமே வளர்ந்தது. எங்களுக்கு இளைப்பாற இடம் அதனடியில் என்பதைத் தவிர வேறு தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை. வேறு வழியின்றி அதையே பழக்கப் படுத்திக் கொண்டோம்.
ஆனால் கருவேலம்பூ வாசனைக்கு நிகரான ஒன்றை இதுவரை நான் நுகர்ந்ததில்லை”
உண்மைதான் ராஜாராம். உங்கள் மூலம் அதை நானும் நுகர்ந்தேன்.







Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.


அனுஜன்யா | November 16th, 2010 at 11:13 am #
ராஜாராமை நேரில் பார்க்காமலேயே, அவரைப் பற்றி படிக்கும் போது ரொம்ப நாள்கள் பழகிய மனிதரை நினைவு கூறும் உணர்வு வருவது அந்த மனிதரின் எல்லாம் அடக்கிய எளிமைக்கு உதாரணம்.
மீண்டு, மீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துகள் அண்ணாச்சி.
அனுஜன்யா
சிவக்குமரன் | November 16th, 2010 at 11:23 am #
நினைவு கிளர்த்தல்- தலைப்பில் ஒளிந்திருக்கும் கவிதையும் கதையும்.
நல்லா இருக்குங்க அண்ணாச்சி.
ஓவியத்த பத்தி ஒண்ணும் தகவல் காணுமே?
எங்க ஊர்ப்பக்கம் அடிக்கடி ஒருத்தர்(சமூகத்தோட பார்வையில மன நிலை சரியில்லாதவர்) காலியா இருக்கிற சுவத்துல வெறும் கலர் சாக்பீஸ்(சுண்ணக்கட்டி) வச்சி சர சரன்னு அரை மணி நேரத்துல சுவர் முழுக்க ஏதாவதொரு இயற்கை காட்சியை வரஞ்சிட்டு போய்ட்டே இருப்பாரு. கொஞ்ச நாளா அவர பாக்க முடியல. இந்த ஓவியம் எனக்கு அவர ஞாபகப்படுத்திடிச்சி.
admin | November 16th, 2010 at 1:24 pm #
நன்றி அனுஜன்யா.
ஏற்கனவே பழகிய இருவரது சந்திப்புப் போலத்தான் இருந்தது அது.
admin | November 16th, 2010 at 1:25 pm #
நன்றி சிவா.
படம் நெட்டிலிருந்து எடுத்ததுதான்.
Sanjai | November 16th, 2010 at 1:44 pm #
எனக்கும் அறிமுகம் செய்ததற்கு நன்றிகள். பல நாள் பழகியவர்போன்று மிகுந்த பாசத்துடன் பேசினார். நேரில் சந்திக்க முடியாதது தான் வருத்தம். காலம் கெடக்கு. பாத்துக்கலாம்.
வடகரை வேலன் | November 16th, 2010 at 3:44 pm #
ஆமாம் சஞ்செய் அந்த நெருக்கம் தான் அவர்பலமே.
டிசம்பர் 23 ஊருக்குப் போகிறார். அதற்கு முன்பாக மீண்டும் சந்திகலாம்.
rajaram | November 22nd, 2010 at 12:00 pm #
திருப்பி செலுத்தக் கூடியதாக அன்பு செஞ்சிருக்கலாமே வேலன். சக்திக்கு மீறியதாக இருக்கிறது. என்றாலும், நன்றி மக்கா!
அனு,
பின்னூட்டங்களில் பார்ப்பது அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. சீக்கிரம் எழுத வாங்க மக்கா. ப்ளீஸ்…
சஞ்சய்,
ஆமாம் சஞ்சய். காலம் கெடுக்குதான். அவசியம் பார்த்துக்கலாம்.